முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு


உள்நாட்டில் கோழி முட்டைகளுக்கான விலை சரிவடைந்ததாலும், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளில் முட்டை நுகர்வு அதிகரித்திருப்பதாலும் வளைகுடா நாடுகளில் தடை இருந்தபோதும் நாமக்கல் மண்டல முட்டை ஏற்றுமதி பெருமளவில் உயர்ந்துள்ளது. 

எனினும், இந்த ஏற்றுமதி உயர்வு ஜனவரி மாதத்தில் தொடராத நிலையே ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்திலிருந்து ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க மற்றும் ஓமன் உள்ளிட்ட 9 வளைகுடா நாடுகளுக்கு கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.



பறவைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஓமன் தவிர மற்ற வளைகுடா நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய 
முட்டைகளுக்கு தடை நிலவுகிறது. 


இதனடிப்படையில், கடந்த 2012 ஏப்ரல் மாதத்துக்கு முன்பு வரை மாதம் 5.50 கோடி முதல் 7.22 கோடி வரை இருந்த கோழி முட்டை ஏற்றுமதி, வடமாநிலங்களில் ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பாதிப்பை அடுத்து மார்ச் மாதத்தில் ஓமன் நாட்டில் விதிக்கப்பட்ட தடை காரணமாக செப்டம்பர் மாதம் வரை 4.15 கோடியாகக் குறைந்தது. 

மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் செப்டம்பர் இறுதியில் ஓமனில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், அக்டோபர் மாதத்தில் மட்டும் நாமக்கல்லில் 8.27 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூர் அருகே ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பை அடுத்து நவம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் ஓமன் நாட்டில் தடை விதிக்கப்பட்டது. 

இதனால், நவம்பரில் 7.37 கோடியாக குறைந்த முட்டை ஏற்றுமதி, டிசம்பரில் 8.97 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்திருப்பது முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் கடும் குளிர்காரணமாக அவ்விரு நாடுகளிலும் முட்டை நுகர்வு பெருமளவில் உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் முட்டை விலை டிசம்பர் மாதத்தில் ரூ.3-க்கும் கீழே குறைந்ததால் பண்ணையாளர்களுக்கு உள்நாட்டுச் சந்தையில் பெருமளவில் லாபம் குறைந்து காணப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் கவனம் செலுத்தியதை அடுத்து வளைகுடா நாடுகளில் தடை நிலவியபோதும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இருப்பினும், இந்த ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் குறையக் கூடும் என்றே கூறப்படுகிறது. ஜனவரி மாத தொடக்கம் முதலே உள்நாட்டில் முட்டைகளுக்கான கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. 

அதன்படி, தற்போது முட்டை ஒன்றுக்கு ரூ.3.40 கிடைப்பதால் பண்ணையாளர்கள் உள்நாட்டு வர்த்த கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், ஜனவரி மாதத்தில் நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரியக்கூடும்.

பெங்களூர் பறவைக்காய்ச்சல் பாதிப்பை அடுத்து இந்திய முட்டைகளுக்கு ஓமனில் தடை விதிக்கப்பட்டு ஜனவரி 26ம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைகிறது. 

தற்போது இந்தியாவில் பறவைக்காய்ச்சலுக்கான தொற்று இல்லாததால் ஓமனில் தடை விலக்கிட மத்திய அரசை வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஓமனில் தடை விலக்கிடும் பட்சத்தில் முட்டை ஏற்றுமதி அதிகரிக்கப்படலாம்.

நன்றி - தினமணி ஜனவரி 17,2013

Download As PDF

0 comments: