சீரகம் ஏற்றுமதியில் இந்தியா


நடப்பு 2012-13ம் நிதியாண்டில், சீரகம் ஏற்றுமதியில் இந்தியா, புதிய சாதனை படைக்க உள்ளது. தற்போது, நிர்ணயித்த இலக்கை விஞ்சி, சீரகம் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.

இந்திய சமையலில், முக்கிய அங்கம் வகிக்கும் சீரகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் விளைகிறது. இந்திய சீரகத்திற்கு, உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

உலக நிலவரம் : சர்வதேச சீரகச் சந்தையில், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்பு தான் அதிக அளவில் இருந்தது. 

இந்நிலையில், சிரியாவின் உள்நாட்டு கலவரமும், துருக்கியில் நிலவும் அரசியல் சூழலும், அந்நாடுகளின் சீரக ஏற்றுமதியை பெரிதும் பாதித்துள்ளன.

உலக வேளாண் பொருட்கள் சந்தையில், இந்நாடுகளின் சீரகம் அளிப்பு குறைந்துள்ளது. இந்த இடைவெளியை இந்தியா சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அதிக அளவில் சீரகத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

புதிய வரத்து : இந்திய நறுமண பொருள்கள் வாரியம், நடப்பு நிதியாண்டில், 45 ஆயிரம் டன், சீரகம் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது.


ஆனால், நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், சீரகம் ஏற்றுமதி, இலக்கு அளவான, 45 ஆயிரம் டன்னை எட்டி விட்டது. 

தற்போது, அறுவடை செய்யப் பட்ட புதிய சீரகம் சந்தைக்கு வரத் துவங்கி உள்ளதால், வரும் மார்ச் இறுதிக்குள் மேலும், 15 ஆயிரம் டன் சீரகம் ஏற்றுமதி ஆகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து, நடப்பு நிதிஆண்டில், நாட்டின் சீரகம் ஏற்றுமதி, 60 ஆயிரம் டன் என்ற புதிய உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச சந்தையில், இந்திய சீரகம், டன் ஒன்று 3,000 டாலர் (1.65 லட்ச ரூபாய்) என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. 

இந்தியாவின் சீரக ஏற்றுமதி, ஆண்டுக்கணக்கில், 30 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது.

உற்பத்தி : அதற்கேற்பசீரகம் உற்பத்தியும் உயர்ந்து வருகிறது. இதைஅடுத்துஉள்நாட்டிலும்சீரகம் சப்ளை சீராக உள்ளது. 

சென்ற நிதியாண்டுநாட்டின் சீரகம் உற்பத்தி, 40 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை-55 கிலோ) என்ற அளவில் இருந்தது. 

இதை விட, நடப்பு நிதியாண்டில், சீரகம் உற்பத்தி அதிகம் இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில், சில பகுதிகளில் பெய்த மழையால், சீரகம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதனால், சென்ற நிதியாண்டைப் போன்றே, நடப்பு நிதியாண்டிலும், அதே அளவில் சீரகம் உற்பத்தி இருக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில், தற்போது சீரகம் வரத்து, நாளொன்றுக்கு, 4,000 மூட்டைகள் என்ற அளவில் உள்ளது. தற்போது புதிய பயிர் அறுவடை நடைபெற்று வருவதால், சந்தையில் சீரகம் வரத்து 15 ஆயிரம் மூட்டைகளாக உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம், சீரகம் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிவடைந்து வருகிறது. முன்பேரச் சந்தையில், தின வர்த்தகத்தில் சீரகம் விலை, கடந்த இரண்டு மாதங்களில், 10 சதவீதம் சரிவடைந்துள்ளது. 

புதிய வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், ஒரு கிலோ சீரகம் விலை, 133 ரூபாயில் இருந்து, 125 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி - தினமலர்

Download As PDF

1 comments:

suchendra said...

sri na catering business panran na idly export pannalamnu idea atharku help kuga pls eapdi pack pananum rate cover pananum pls tell me sir