கோதுமை ஏற்றுமதி அதிகரிப்புநடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த கோதுமை ஏற்றுமதி, 95 லட்சம் டன்னை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில், அதிகளவில் கோதுமை உற்பத்தியாகும் நாடுகளில், இவ்வாண்டு, உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. 

கையிருப்பு : இந்நிலையில், இந்தியாவில், கோதுமை உற்பத்தி, 10 கோடி டன்னை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கையிருப்பும், அதிகளவில் உள்ளது. கூடுதலாக, 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக தெரியவந்து உள்ளது.சர்வதேச சந்தையில், இந்திய கோதுமைக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

இந்நிலையில், உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பீடு மற்றும் கையிருப்பை குறைக்கும் வகையில், இதன் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

நாட்டின் பல முக்கிய மாநிலங்களில், கோதுமை சாகுபடி பரப்பளவும், உற்பத்தியும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. 

தனியார் துறை : அவ்வாறு, கோதுமை உற்பத்தி உயரும் நிலையில், அதிகளவில் கையிருப்பில் உள்ள கோதுமையை ஏற்றுமதி செய்யும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், இந்திய உணவு கழகத்தின் கையிருப்பில் உள்ள கோதுமையை, அரசின் முகமை அமைப்புகளான, எம்.எம்.டி.சி., எஸ்.டி.சி., மற்றும் பி.இ.சி., ஆகியவையே விற்பனை செய்து வருகின்றன. 

மத்திய அரசு, தனியார் துறை வாயிலாகவும், கோதுமை விற்பனை மற்றும் ஏற்றுமதியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, சாதனை அளவாக, 9.30 கோடி டன்னை எட்டியது. கோதுமை அதிகளவில் விளையும் மாநிலங்களில், பருவநிலை நன்கு உள்ளதால், இவ்வாண்டு கோதுமை உற்பத்தி, 10 கோடி டன்னை தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில், அதிகளவில் கோதுமை உற்பத்தியாகும், ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில், இதன் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. 

அதேசமயம், வங்கதேசம், தென்கொரியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில், இந்திய கோதுமைக்கு தேவை அதிகரித்துள்ளது.மத்திய அரசு, 23 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யும் வகையில், ஏல புள்ளிகளை நிறைவு செய்துள்ளது. 

இவ்வாண்டு, 45 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், 15 லட்சம் டன் கோதுமை, ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இலக்கு : மத்திய அரசு, இவ்வாண்டு ஒட்டு மொத்த அளவில், 95 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இந்த இலக்கை எட்டுவதற்கு, பொதுத் துறை அமைப்புகள் வாயிலாக மட்டுமின்றி, தனியார் துறை நிறுவனங்கள் மூலமும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல்-மே மாதங்களில், கோதுமை ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு டன் 300-330 டாலர் என்ற அளவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அமெரிக்கா : சர்வதேச சந்தையில், இந்திய கோதுமைக்கு தேவைப்பாடு அதிகரித்துள்ளதை, சாதகமாக பயன்படுத்தி, இதை அதிகளவில் ஏற்றுமதி செய்ய அரசு விரும்புகிறது. 

அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில், வறட்சி நிலவுவதால், அந்நாட்டில், இவ்வாண்டு ஒட்டு மொத்த அளவில் கோதுமை உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது.

இதர ஆசிய சந்தைகளில் ஒரு டன் இந்திய கோதுமையின் விலை, 340 டாலர் என்ற அளவில் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு டன் கோதுமை, 350-355 டாலர் என்ற அளவில் உள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், இதன் உற்பத்தி குறையும் நிலையில், அது, இந்தியாவின் கோதுமை ஏற்றுமதிக்கு மேலும் வழி வகை செய்யும் என, சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

நன்றி ௦- தினமலர் ஜனவரி 22,2013

Download As PDF

0 comments: