சர்க்கரை ஏற்றுமதி விரைவில் தொடங்கும்


நடப்பு 2012–13 சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான (அக்டோபர்–செப்டம்பர்) சர்க்கரை ஏற்றுமதிக்கு விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதனையடுத்து ஏற்றுமதி விறுவிறுப்படையும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2011–12 பருவத்தில் சர்க்கரை ஏற்றுமதி 34 லட்சம் டன்னாக இருந்தது.
உற்பத்தி அதிகரிப்பு :
நம் நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்க்கரை உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நடப்பு பருவத்தில் 2.40 கோடி டன் சர்க்கரை உற்பத்தியாகும் என கணித்துள்ளது. 
எனினும் பெரிய ஆலைகள் சர்க்கரை உற்பத்தி 2.45 கோடி டன்னை எட்ட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளன.

இது, கடந்த பருவ உற்பத்தியான 2.62 கோடி டன்னை காட்டிலும் குறைவுதான் என்றாலும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் நன்றாகவே உள்ளன. 
இந்த ஆண்டில் குறைந்தபட்சம் 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என மத்திய உணவு துறை அமைச்சகத்தின் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச சந்தையில் விலை நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை. சப்ளை அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும். நடப்பு பருவத்தில் 50 முதல் 70 லட்சம் டன் வரை சர்க்கரை சப்ளை கூடுதலாக இருக்கும் என தெரிகிறது. 
இது, 2013–14 பருவத்தில் மேலும் 70 லட்சம் டன் அதிகரிக்கும் என்றும் முன்னறிவிப்பு செய்துள்ளனர். இதனால் கடந்த நான்கு மாதங்களில் சர்க்கரை விலை டன்னுக்கு ரூ.35,750 என்ற அளவிலிருந்து ரூ.28,215–ஆக சரிவடைந்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி :
எனவே ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நடப்பு ஆண்டு முழுவதுமாக சர்வதேச சந்தையில் விலை ஏற வாய்ப்பில்லை என்ற மதிப்பீடும் வெளியாகி உள்ளது. 
இது, இத்துறையினரை உற்சாகமிழக்க செய்துள்ளது. டன்னுக்கு ரூ.35,750–க்கு மேல் விலை கிடைத்தால் ஒழிய, மத்திய அரசு அனுமதித்தாலும் சர்க்கரை ஏற்றுமதி ஆதாயமற்ற ஒன்றாகவே இருக்கும் என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நன்றி ௦- தினத்தந்தி ஜனவரி 21,2013

Download As PDF

0 comments: